தமிழ் அறிவோம் தமிழ் வளர்ப்போம் - பகுதி 4

ஆட்சி மொழி அங்கீகாரம்

தமிழ் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாகும். அத்துடன் இந்திய அரசியலமைப்பின் கீழ் தேசிய மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ள 22 மொழிகளுள் ஒன்றாகவும் உள்ளது. இலங்கையில் மூன்று ஆட்சி மொழிகளுள் தமிழும் ஒன்று. சிங்கப்பூர் நாட்டிலும் தேசிய மொழிகளுள் ஒன்றாகத் தமிழ் இடம் பெற்றுள்ளது. தென்னாபிரிக்காவிலும் தமிழுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் உள்ளது. மலேசியாவிலும் முதல் நான்கு முகமை மொழிகளில் தமிழும் இடம்பெற்றுள்ளது. மலேசியாவில் தொடக்க இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது

இந்தியாவில் செம்மொழி அங்கீகாரம்

இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் உள்ள பல தமிழ் அமைப்புக்களினதும், அறிஞர்களினதும் நீண்ட கால முயற்சிகளைத் தொடர்ந்து இந்திய அரசினால் தமிழ் ஒரு செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அங்கீகாரம் பெற்றுள்ள முதல் இந்திய மொழி தமிழாகும். இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளினதும் கூட்டுக் கூட்டமொன்றின்போது, 2004 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் நாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களால் இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டது.

பேச்சுத்தமிழ் - உரைநடைத்தமிழ்
தமிழ், அதன் பல் வேறுபட்ட வட்டார வழக்குகளுக்கு மேலதிகமாக, இலக்கியங்களில் பயன்படும் முறையான செந்தமிழுக்கும், கொடுந்தமிழ் என வழங்கப்படும் பேச்சுத் தமிழுக்கும் இடையே தெளிவான இருவடிவத் தன்மை (diglossia) காணப்படுகின்றது. இங்கே கொடுந்தமிழ் என்பது அனைத்து வட்டாரப் பேச்சுத் தமிழ் வழக்குகளையும் பொதுவாகக் குறிக்கும் ஒரு சொற் பயன்பாடு ஆகும். இந்த இருவடிவத் தன்மை பண்டைக் காலம் முதலே தமிழில் இருந்து வருவதை, கோயில் கல்வெட்டுக்களிற் காணப்படும் தமிழ், சமகால இலக்கியத் தமிழினின்றும் குறிப்பிடத் தக்க அளவு வேறுபட்டுக் காணப்படுவதினின்றும் அறிந்துகொள்ள முடியும். இவ்வாறு, செந்தமிழ் எந்த வட்டார மொழி வழக்கையும் சாராது இருப்பதனால், எழுத்துத் தமிழ், தமிழ் வழங்கும் பல்வேறு பகுதிகளிலும், ஒன்றாகவே இருப்பதைக் காணலாம்.

தற்காலத்தில், எழுதுவதற்கும், மேடைப் பேச்சுக்கும் செந்தமிழே பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, செந்தமிழ், பாட நூல்களுக்குரிய மொழியாகவும், பெருமளவுக்கு இலக்கிய மொழியாகவும், மேடைப் பேச்சுகளுக்கும், விவாதங்களுக்கும் உரிய மொழியாகவும் விளங்கிவருகிறது. அண்மைக் காலங்களில், மரபு வழியில், செந்தமிழுக்குரிய துறைகளாக இருந்து வந்த பகுதிகளிலும் கொடுந்தமிழ்ப் பயன்பாடு அதிகரித்து வருவதைக் காணமுடிகின்றது. பெரும்பாலான தற்காலத் திரைப்படங்கள், மேடை நாடகம் மற்றும் தொலைக் காட்சி, வானொலி முதலியவற்றில் இடம்பெறும் மக்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் பலவற்றிலும் கொடுந்தமிழ் பயன்படுத்தப்படுவதைக் காணலாம். பல அரசியல் வாதிகளும், மக்களுக்கு நெருக்கமாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் நோக்கில் தங்கள் மேடைப் பேச்சுக்களிலும் கொடுந்தமிழைப் பயன்படுத்தி வருகின்றனர்.


செந்தமிழுக்கான இலக்கண விதிகள் இறைவனால் உருவாக்கப் பட்டதாக நம்பப்படுவதால், செந்தமிழே சரியான மொழியாகக் கருதப்பட்டது. இதனால், பேச்சுத் தமிழ் வழக்குகளுக்குச் சிறப்புக் கிடைக்கவில்லை. (எடுத்துக்காட்டு, காங்கேயர் (Kankeyar), 1840). பல ஐரோப்பிய மொழிகளில் காணப்படுவதற்கு மாறாக, தமிழில், அதன் வரலாற்றின் பெரும் பகுதியிலும், ஒரு பொதுவான பேச்சுமொழி இருந்ததில்லை. தற்காலத்தில் அதிகரித்த கொடுந்தமிழ்ப் பயன்பாடு, அதிகாரபூர்வமற்ற முறையில் பொதுப் பேச்சுத் தமிழ் வழக்குகள் தோன்றுவதற்குக் காரணமாகவுள்ளது. இந்தியாவில் பொதுக் கொடுந்தமிழ், 'படித்த, பிராமணரல்லாதவர்'களின் பேச்சுவழக்கை அடிப்படையாகக் கொண்டுள்ளது (Schiffman, 1998). எனினும் குறிப்பிடத் தக்க அளவுக்கு, தஞ்சாவூர் மற்றும் மதுரைப் பேச்சு வழக்குகளில் செல்வாக்கு உள்ளது. இலங்கையில், அதிக மக்கள் தொகையைக் கொண்ட யாழ்ப்பாணப் பேச்சு வழக்கையே பெரும்பாலான வெளியார் இலங்கைத் தமிழ்ப் பேச்சு வழக்காக இனங்கண்டு கொள்கின்றனர்.

எழுத்துமுறை
தமிழ் எழுத்து முறைமை ஒலிப்பியல் அடிப்படையிலானது; குறுக்கம், அளபெடை, மற்றும் புணர்ச்சி நெறிகளுக்கு உட்பட்டே எழுத்துக்கள் ஒலிக்கப்படுகின்றன. தற்போதைய தமிழ் எழுத்துமுறை தமிழ் பிராமியில் இருந்து தோன்றியது ஆகும். தமிழ் பிராமி காலப்போக்கில் வட்டெழுத்தாக உருமாறியது. ஆறாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் "வட்டெழுத்து" முறை உருவானது. ஓலைச்சுவடிகளிலும், கல்லிலும் செதுக்குவதற்கேற்ப இருந்தது.

வட்டெழுத்தில் சமஸ்கிருத ஒலிகள் குறிக்கப்பட முடியாது என்பதால் சமஸ்கிருத ஒலிகளை எழுதும் பொருட்டு சில கிரந்த எழுத்துமுறை கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தினர். இவ்வெழுத்துக்களைப் பயன்படுத்துவதற்கு மாறாக தொல்காப்பியம் கூறியபடி அச்சொற்களைத் தமிழ்படுத்த வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

பின்னர், வீரமாமுனிவரின் அறிவுரைப்படி இரட்டைக் கொம்பு போன்ற மாற்றங்கள் செய்யப்பட்டன. 1977 எம். ஜி. இராமச்சந்திரன் ஆட்சியில் அச்சில் ஏற்றுவதை எளிமைப்படுத்தும் வகையில் பெரியாரால் பரிந்துரைக்கப்பட்ட ஆகார மற்றும் ஐகார உயிர்மெய் எழுத்துக்களில் சீர்திருத்தம் செய்யப்பட்டது. எனினும் பெரியாரது உகர சீர்திருத்தம் செயல்படுத்தப்படவில்லை

0 மறுமொழிகள்:

Post a Comment

உங்களின் மறுமொழிகளை இடுங்கள் !